தமிழகம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களின் 25 வட்டாரங்களில் வேளாண் வறட்சி - வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களின் 25 வட்டாரங்களில் மிதமான வேளாண் வறட்சி ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் ஜெயந்த் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் 2022-ம் ஆண்டு அக்.1 முதல் அதே ஆண்டு டிச.31 வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில் மிதமான மழைப்பொழிவு ஏற்பட்டது.

இதனால் 33 சதவீதத்துக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த 6 மாவட்டங்களிலுள்ள 25 வட்டாரங்கள் மிதமான வேளாண் வறட்சி பாதிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி. சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், சாக்கோட்டை (காரைக்குடி). ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி,மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை. தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், குருவிகுளம்,மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, ரெட்டியாபட்டி (திருச்சுழி) ஆகிய வட்டாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT