உதகை அருகேயுள்ள தேனாடு கம்பை பகுதியில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டுள்ள தோட்டம். படம்: ஆர்.டி.சிவசங்கர் 
தமிழகம்

உதகையில் மழையால் விளைச்சல் பாதிப்பு: மலைப் பூண்டு விலை உயர்வு; கிலோ ரூ.400-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

உதகை: உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளில் கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக மலைத்தோட்டக் காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

கோத்தகிரி, மஞ்சூர், ஆடாசோலை, தேனோடுகம்பை, அணிக்கொரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டுள்ள மலைப் பூண்டு, சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், தற்போது உதகை மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் மலைப் பூண்டு கிலோ ரூ.400 வரை விலை உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் பூண்டு ரூ.160 முதல் ரூ.180வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே தக்காளி, சின்ன வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பூண்டு விலையும் உயர்ந்துள்ளதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வடமாநிலங்களில் பெய்த மழையால், அங்கும் பூண்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வடமாநில வியாபாரிகள் மேட்டுப்பாளையம் மொத்த விற்பனை மண்டிக்கு வந்து, மலைப்பூண்டை மொத்தமாக வாங்கிச் சென்று விடுகிறார்கள்.

மருத்துவக் குணம் நிரம்பி உள்ளதால் மலைப் பூண்டுக்கு ஏற்கெனவே வரவேற்பு அதிகம். இந்நிலையில், விளைச்சல் பாதிப்பும் சேர்ந்து, மலைப்பூண்டின் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT