சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.155 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என கனிமொழி சோமு எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்குப் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் அடிப்படைகட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமுகேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில் வருமாறு: தாம்பரம் ரயில் முனையத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2 கட்டங்களாக திட்டமிடப்பட்டு, ரூ.49 கோடி மதிப்பிலான முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டன. 2-ம் கட்டப் பணிகளுக்கு மேலும் ரூ.106 கோடி தேவைப்படும்என்று கணக்கிடப்பட்டு, போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில்வே திட்டங்களைப் பொறுத்த வரை, பொருட்கள் இடம்மாறுதல், விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான இடம், அவற்றைகையகப்படுத்தும் போது எழும்சட்ட சிக்கல்கள், ஓராண்டில் எவ்வளவு மாதங்கள் இடர்பாடின்றி வேலை செய்ய முடிகிறது என்பனபோன்ற பல்வேறு காரணிகளை வைத்தே ஒவ்வொரு திட்டமும் எவ்வளவு விரைவாக முடிக்கப்படுகிறது என்பது நிர்ணயிக்கப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலைய கட்டமைப்பு மேம்பாட்டுப் பணியைவிரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.