தமிழகம்

சென்னை கேஎம்சி மருத்துவமனையில் வருகிறது மல்டி லெவல் பார்க்கிங் வசதி: வெயில், மழையில் கிடந்து நோய்வாய்ப்படும் வாகனங்கள்

ம.மகாராஜன்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை இல்லாமல் வெயில், மழையில் கிடந்து வீணாகும் வாகனங்களை பாதுகாக்க விரைவில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரான சென்னையில் செயல்பட்டு வரும் பிரதான அரசு மருத்துவமனைகளில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மிகவும் முதன்மையானதாகும்.

தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு பெற்ற இந்த மருத்துவமனையில் வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் ஆண்டுக்கு 9 லட்சம் புறநோயாளிகளும், 3 லட்சம் உள்நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தவும், விரிவாக்குவதற்கும் தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி ரூ.368 கோடியில் ஜெய்கா நிதி உதவியுடன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, ரூ.125 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. அதே நேரம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக பொது வாகன நிறுத்துமிடம், மருத்துவக் கல்லூரியின் மாணவியர் விடுதி எதிரே அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உணவகம் அருகேயும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்களுக்கென தனியாக, தீக்காய சிகிச்சை வார்டு அருகே வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இங்கு வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன நிறுத்தங்கள் இல்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் இருக்கும் வாகன நிறுத்தங்களில் மேற்கூரை அமைக்க வேண்டும் எனவும் மருத்துவமனைக்கு வந்து செல்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹரிராம் பிரசாத்

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மேற்கு மாம்பலம் ஹரிராம் பிரசாத்: வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும் என்பதே குழப்பமாக இருந்தது. அதைத்தொடர்ந்து திறந்தவெளிமைதானத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்குகடும் வெயிலில் இருசக்கர வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலம் என்றால் மேலும் அவதிகுள்ளாகும் நிலை ஏற்படும். எனவே இந்த வாகன நிறுத்திமிடத்தில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்க வேண்டும். வாகன நிறுத்துமிடத்துக்கு எளிதில் செல்லும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். வளசரவாக்கம்

யுகுந்தன்

யுகுந்தன்: இங்கு முறையாக வாகனங்களை நிறுத்தாததால், மைதானததில் வாகனங்கள் அங்குமிங்குமாக கும்பலாக நிறுத்தப்படுகின்றன.

அவசரத்தில் விட்டு சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்தால், வாகனத்தை வெளியே எடுக்க முடியாத அளவுக்கு நெரிசலில் சிக்கிக் கிடக்கும். எனவே வரிசையாக வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். மேலும், சிசிடிவி கேமராக்களை அமைத்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் மைதானம், வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநோயாளிகள் வருகைக்கான காலை நேரத்துக்கு பிறகு, மாலை நேரங்களில் வாகனங்களின் வருகை குறைந்துவிடும்.

அதன்பிறகு மாணவர்கள் மைதானத்தை விளையாடுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை விரிவாக்கத்துக்காக ஜெய்கா நிதி உதவியுடன் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த பணிகள் நிறைவு பெறும்போது, இத்துடன் கல்லூரி மைதானத்தில் முழுமையான வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதனால் மருத்துவக்கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை வேறு இடத்தில் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. அதேபோல் பழைய கட்டிடத்தை இடித்து, புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவமனை டவரில் மல்டிலெவல் பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. எனவே வாகன நிறுத்துமிடங்களுக்கு இனிமேல் பிரச்சினை இருக்காது. இவ்வாறு நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT