மதுரை: மதுரை நகரில் முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் கோரிபாளையம் சிக்னலும் ஒன்று. தினமும் வாகன நெருக்கடி மிகுந்த பகுதி. அரசு மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அண்ணாநகர், கருப்பாயூரணி பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அதிகரிப்பால் இந்த சிக்னல் பகுதியில் நெருக்கடியை தவிர்க்க முடியவில்லை. காலை, மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் அவ்விடத்தை கடப்பதில் சிரமம் உள்ளது.
இந்நிலையில்,கோப்பாளையம் பகுதியில் வாகன நெருக்கடியை தவிர்க்க, சில மாதத்திற்கு முன் பனகல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து சிம்மக்கல், நெல்பேட்டை, கீழவாசல் மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் புதூர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அரசு மருத்துவனையின் 3வது கேட் முன்பாக பிணவறைக்கு செல்லும் சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
நெல்பேட்டை பகுதிக்கு செல்வோர் ஓப்புளா படித்துறை வழியாகவும், சிம்மக்கல் பகுதிக்கு செல்வோர் ஆழ்வார்புரம் வழியாகவும், மருத்துவமனை பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களும் (பிரிலெப்ட்) ஏவி மேம்பாலத்திலும் ஏறி செல்கின்றனர். ஆனால், பனகல் சாலையில் இருந்து கோரிப்பாளையம் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் செல்லூர் மேலத்தோப்பு, செல்லூர் ரோடு வழியாக கோரிப்பாளையம் சிக்னலை கடந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மருத்துவமனையில் இருந்து கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதிக்கு செல்வோர் தேவர் சிலை சிக்னலில் நின்று சென்று வந்தனர். இந்த நடைமுறை பனகல் சாலை போக்குவரத்து மாற்றத்திற்கு பிறகும் தொடர்ந்த நிலையில், நேற்று முதல் திடீரென சிக்னலில் இருந்து கோரிப்பாளையம் பகுதிக்கு போக முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது. தடுப்பு வேலிகள் போட்டு போக்குவரத்து போலீஸார் தடுத்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனையில் இருந்து வாகனங்களில் செல்லும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளி ட்டோர் மீனாட்சி கல்லூரி, வடகரை, செல்லூர் சாலை வழியாக கோரிப்பாளையத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டியுள்ளது.
தேவையற்ற நேரம் வீணாகிறது. காவல்துறை உயரதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமல், சிக்னலில் பணியிலுள்ள போலீஸாரே தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். அவசர தேவைக்கு மருத்துவமனை பகுதியில் இருந்து போக முடியாமல் தவிப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணிபுரிவோரில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வைகைக்கு வடபகுதியில் வசிக்கின்றனர். பணி முடித்து இரவு பகல் நேரத்தில் வீட்டுக்கு திரும்பும் போது, தேவையின்றி சுற்றி வரவேண்டியுள்ளது. மருத்துவமனைக்கு அருகில் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தாலும் வாகனத்தில் சென்றால் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றுகிறோம்.
எனவே, ஆம்புலன்ஸ் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படுவது போன்று அத்தியாவசிய பணிக்கென வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகளின் நலன் கருதி தேவர் சிலை சிக்னலில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த நிலையை தொடரவேண்டும். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.
காவல் துறையினரிடம் கேட்டபோது, ‘‘பெரும்பாலும் கோரிப்பாளையம் சிக்னலில் பேக்குவரத்து அதிகரிக் கிறது. தமுக்கம், செல்லூர், பெரியார் , சிம்மக்கல், நெல்பேட்டை பகுதிகள், பனகல் சாலையில் இருந்து சிக்னலுக்கு வரும் வாகனங்களை நிறுத்தி அனுப்பு வதில் சிரமம் உள்ளது. மருத்துவமனை பகுதியில் இருந்து காலை, மாலை நேரத்தில் வரும் வாகனங்களை ஒப்பிடும்போது, குறைவு என்பதால் தற்காலிகமாக தேவர் சிலையில் இருந்து கோரிப்பாளையம் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இதன்மூலம் இரு சாலையில் இருந்தும் வாகனங்களை துரிதமாக கடத்த முடிகிறது. மருத்துவமனையில் இருந்து கோரிப் பாளையம், தல்லாகுளம், புதூர், நத்தம் ரோடு பகுதிக்குச் செல்வோர் அண்ணாபேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை, மருத்துவக்கல்லூரி ரோடு, காந்திமியூசியம், தமுக்கம் ரோடு, சட்டக் கல்லூரி வழியாகவும் செல்லலாம், தேவர் சிலைக்கு மேற்கு பகுதியில் சூப்பர் டெய்லர் கடை வழியாக டூவீலரில் செல்ல தடையில்லை,’’ என்றனர்.