தமிழகம்

புதுச்சேரி வானொலியின் ஒலிபரப்பில் புதிய முறை: பலரும் பணி இழக்கும் அபாயம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 1967-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அகில இந்திய வானொலி நிலையம் அன்றைய மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த நிலையத்தின் முதன்மை அலைவரிசை (Primary Channel) புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு கடந்த 54 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது.

இதன் மூலம் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் உருவாகியுள்ளனர். வானொலி நிலையம் தனக்கே உரித்தான பண்பாட்டுக் கூறுகளுடன் நடப்புச் செய்திகளையும் இந்த அலைவரிசையில் வழங்கி வருகிறது. இதற்கிடையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரெயின்போ பண்பலை அலைவரிசை தொடங்கப்பட்டது.

இது மக்களுக்கு செய்திகள் மற்றும் பல்வேறு வகைகளில் புதிய வடிவங்களில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.இதனை ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கேட்டு பயன்பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில் கடந்த பல ஆண்டுகளாக அகில இந்திய வானொலி நிலையங்களில் உள்ள நூற்றுக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் இடையே பற்றாக்குறை நிலவுகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் ரெயின்போ பண்பலைக்கான சிறப்பு நிகழ்வுகள் தற்போது நிறுத்தப்பட்டு, அந்த அலைவரிசையிலும் முதன்மை அலைவரிசைக்கான நிகழ்ச்சிகள் நேற்று முதல் ஒலிப்பரப்பாக தொடங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக பாரதிதாசன் பேரனும் வானொலி நிலைய ஓய்வு பெற்ற இயக்குநருமான செல்வம் கூறுகையில், "நாடு முழுவதும் 36 வானொலி நிலையங்களில் பண்பலையும், முதன்மை அலைவரிசையும் உள்ளன. தமிழகத்தில் திருச்சி, மதுரை, சென்னை, கோவை, திருநெல்வேலி, புதுச்சேரி உட்பட 7 இடங்களில் உள்ளன.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்குச் சொந்தமான இந்த அரசு நிறுவனத்துக்கு நிதி மற்றும் உரிய வசதிகள் குறைக்கப்பட்டு விட்டன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, ஒன்றிய அரசின் அரசு ஊடகங்கள் கட்டாயம் இயங்க வேண்டும். குறிப்பாக போர்க்காலத்தில், பேரிடர் காலங்களில் இதன் சேவை தேவைப்படுவதால் இதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஒன்றிய அரசு எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது. இது பிரசார் பாரதி நிறுவன சட்ட விதிகளாகும்.

ஆனால் ரெயின்போ பண்பலையில் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு, தகவல் அலைவரிசையான முதன்மை அலைவரிசை நிகழ்ச்சிகளே நேற்று முதல் ஒலிபரப்பாகி வருகிறது. இந்த நிலை நாடெங்கும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணி இழப்பர். மேலும் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது .

இது மக்கள் விரோத நடவடிக்கையாகும். இது இளைஞர்களுக்கு மற்றும் பெண்களுக்கு அரசு இழைக்கும் துரோகமாகும். இம்முறையை கைவிட வேண்டும். இந்த புதிய முடிவு தனியார் வானொலி நிறுவன வளர்ச்சிக்கே கைகொடுக்கும். புது டெல்லி அகில இந்திய வானொலி தலைமை இயக்குநர் மற்றும் பிரசார் பாரதி தலைமைச் செயல் இயக்குநர், புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலைய இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரெயின்போ பண்பலை வானொலிக்கு உள்ளூர் விளம் பரங்களின் மூலம் வர்த்தக வருவாய் கிடைத்து வந்த நிலையில், இந்த புதிய முறையால் அகில இந்திய வானொலிக்கு வணிக ரீதியாகவும் இழப்பு ஏற்படும். ஆனாலும், அதையும் மீறி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT