சென்னை: நெட் ஜீரோ இலக்கை எட்டும் வகையில் மாதவரம் பேருந்து நிலையத்தில் 250 கிலோ வாட் சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஆந்திரா, தெலங்கானாவுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தின்படி மாதவரத்தில் ரூ.95 கோடியில் புறநகர் துணை பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. 8 ஏக்கர் பரப்பில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 560 சதுர அடி கட்டுமான பரப்பளவில் இந்தப் புறநகர் துணை பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இரு அடுக்குகள் பேருந்து நிலையத்தில், தரைதளத்தில் 42 பேருந்துகளும், மேல் தளத்தில் 50 பேருந்துகளும் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். மேலும், தாய்மார்கள் பாலூட்டும் அறை, மருந்தகம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வறை, பயணிகள் காத்திருக்கும் அறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் ‘உள்ளது.
இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும், சிறப்பாக பராமரிப்பது தொடர்பாகவும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கோயம்பேட்டிலிருந்து வடக்கு நோக்கி இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தையும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க போக்குவரத்துத் துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆந்திரப் பிரதேச போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தங்கும் அறை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இடம் கொடுக்கவும், பயணிகள் தங்கும் கூடங்களை 2,4, 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றியமைக்கவும், பயணிகள் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி வசதி அமைத்துக் கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், மாநகரப் பேருந்து நிறுத்தம் உள்ள இடத்தில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி அமைக்கவும், பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டுக்கு எல்இடி அறிவிப்பு பலகையும், நுழைவு வாயிலில் வளைவு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெட் ஜீரோ இலக்கை எட்டும் வகையில், மாதவரம் பேருந்து நிலையத்தில் 250 கிலோ வாட் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "மாதவரம் பேருந்து நிலையத்தில் நெட் ஜீரோ என்ற கார்பன் நடுநிலைமையை எட்டும் வகையில் 250 கிலோ வாட் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் நிறைவு பெற்றவுடன் நிலையத்தை அமைக்கும் பணி தொடங்கும்" என்று அவர்கள் கூறினர்.