கோவை: கோவை சி.எம்.சி காலனி குடியிருப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 2.25 சென்ட் இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
கோவை வெரைட்டிஹால் சாலை சி.எம்.சி காலனி குடியிருப்புப் பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசித்தனர். இவர்களுக்காக அதே பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டுமானப் பணிக்கு இடையூறாக மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடு இருந்தது.
அங்கு கோயிலுக்கு சொந்தமான பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டதால், அதிகாரிகள் அப்புறப்படுத்த முயலவில்லை. ஆனால் அந்த வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருவது மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு தெரியவந்தது. மேலும், கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்காக இந்த ஆக்கிரமிப்பு பகுதியை அகற்றித் தருமாறு தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் மற்றும் நகரமைப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று சி.எம்.சி காலனி பகுதியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்ற ஆணையர் உத்தரவிட்டார்.
உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா தலைமையிலான மத்திய மண்டல நகரமைப்புப் பிரிவு அலுவலர்கள் ஆக்கிரமிப் பாளர்களை வெளியேற்றி விட்டு, பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி வீடு மற்றும் அதை சுற்றி அமைக்கப்பட்டிருந்த ஷெட்டுகளை இடித்து அகற்றினர். 2.25 சென்ட் இடம் மீட்கப்பட்டது.