சென்னை: தொழில் பழகுநர் (அப்ரன்டீஸ்) பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி, சென்னை சென்ட்ரலில் வந்தே பாரத் ரயிலை மறித்து போராட்டம் நடத்த வந்த 200-க்கும் மேற்பட்டோரை ரயில்வே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎஃப் ஆலையில் கடந்த 2008-ம்ஆண்டு முதல் தற்போது வரை தொழில் பழகுநர் பயிற்சி முடித்து 17,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு இதுவரையில் வேலைவாய்ப்பு அளிக்கவில்லை எனபுகார் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பு கோரி தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை வந்தே பாரத் ரயிலை மறித்து போராட்டம் செய்ய 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், ரயில்வே அதிகாரிகளுடன் 5 பேர் கொண்ட மாணவர்கள் குழுவினர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், உடனடியாக முடிவெடுக்க முடியாது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கூறியதாவது: ரயில்வேயில் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும், தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். ஆனால், தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎஃப்-ல் வேலை கொடுக்காமல் போலி காரணங்களைக் கூறி புறக்கணித்து வருகின்றனர்.
இதனால், பல ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு இன்றிஅவதிப்படுகிறோம். தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கையை ஏற்கும்வகையில், தொடர்ந்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.