தமிழகம்

கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் சென்னையில் பீன்ஸ் விலை தொடர்ந்து உயர்வு: கொத்துமல்லியின் விலையும் உயர்ந்தது

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் நிலவும் வறட்சி காரணமாக சென்னை நகர காய்கறி அங்காடிகளில் பீன்ஸ் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இரண்டு மாதங்களாக ஒரு கிலோ பீன்ஸின் விலை 100 ரூபாயிலேயே நீடிப்பதால் தற்போது பலரும் அதை தவிர்த்து வருகிறார்கள்.

அனைவராலும் விரும்பி உண்ணப்படும் காய்கறிகளில் ஒன்று பீன்ஸ். சமையலில் முக்கிய காய்கறிகளில் ஒன்றாக பீன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையின் பீன்ஸின் விலை கடந்த மே மாதம் முதல் கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய்க்கு மேல் இருந்துவருகிறது. செவ்வாய்க் கிழமை நிலவரப்படி ஜாம் பஜார், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு சில்லறை காய்கறி விற் பனை அங்காடிகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பீன்ஸை விரும்பி சாப்பிடும் பொதுமக்கள் பலர் அதை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

பீன்ஸ் விலை உயர்வு குறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சௌந்தரராஜன் கூறியதாவது:

கடந்த 2 மாதங்களாக தென் மாநிலங்களில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவிலேயே பீன்ஸ் பயிரிடப்பட்டுள்ளது. ஊட்டியில் விளையும் பீன்ஸ், கோவை, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது. கொடைக்கானலில் விளையும் பீன்ஸ் மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது.

சென்னைக்கு கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீன்ஸ் வருகிறது. தினமும் 200 டன் வரையிலான பீன்ஸ் சென்னைக்கு வந்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது கர்நாடகாவில் மழை குறைவு என்பதால் 10 டன் பீன்ஸ்தான் வருகிறது. அதிகபட்சமாக 550 கி.மீ தூரத்திலிருந்து பீன்ஸ் கொண்டுவரப்படுகிறது.

இதனால் போக்குவரத்து செலவுடன் சேர்த்தால் பீன்ஸ் விலை ரூ.100 வரை செல்கிறது. ஆகவே கடந்த 2 மாதங்களாக இதே விலை நீடிக்கிறது. பருவமழை தீவிரமடைந்து பீன்ஸ் விளைச்சல் அதிகரித்தால்தான் அதன் விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜாம் பஜார் சில்லறை வியாபாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “காய்கறி வாங்க வரும் பொதுமக்களின் முதல் தேர்வாக இருந்த பீன்ஸ், இப்போது விலை உயர்வு காரணமாக பலராலும் ஒதுக்கப் படுகிறது. தற்போது ஹோட்டல்கள் மற்றும் துரித உணவகம் வைத்திருப்போர் மட்டுமே பீன்ஸை வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் வாங்குவது குறைவு” என்றார்.

கொத்துமல்லி விலையும் உயர்வு

சென்னை மார்க்கெட்டுக்கு கொத்துமல்லி யும் கர்நாடக மாநிலத்தில் இருந்துதான் கொண்டுவரப்படுகிறது. அங்கு நிலவும் வறட்சி காரணமாக சென்னைக்கு தினமும் 20 லாரிகளில் வந்துகொண்டிருந்த கொத்து மல்லி, தற்போது 10 லோடு மட்டுமே வருகிறது.

இதனால் ஒரு கட்டு (1.5 கி.கி) ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொத்துமல்லி இல்லை என்று பல கடைகளில் போர்டு வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT