ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகம்தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ''வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அறிவித்தும் கூட தண்ணீரைச் சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சென்னையில் மட்டும் 2 ஆண்டுகளுக்கு பயன்படுத்த வேண்டிய மழைநீர் கடலுக்குள் சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் மழையின்றி வறட்சியே நிலவுகிறது. வைகை, முல்லைப் பெரியாறு அணைகளில் இருந்து தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை.
கோதாவரி ஆற்றிலிருந்து 55 சதவீதம் தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்நிலையில் கோதாவரியில் இருந்து இரும்புக்குழாய் மூலம் காவிரிக்குத் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தால் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்கள் பயன்பெறும். பல ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம். இதன்மூலம் காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு 90 சதவீத நிதியும், மாநில அரசு 10 சதவீத நிதியும் வழங்க வேண்டும். 4 மாநில முதல்வர்களும் பேசி முடிவு எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா பகுதியில் 70 குவாரிகள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால் நீர்வளம் மற்றும் நிலவளம் கடுமையாக பாதிக்கப்படும். இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள ஆறு, குளம், கண்மாயில் இருந்து மணல் அள்ளத் தடை விதிக்க வேண்டும். கச்சா எண்ணெய், நிலக்கரி, சமையல் எண்ணெய், உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது போல மணலையும் இறக்குமதி செய்ய வேண்டும். பர்மா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் 60 முதல் 100 அடிக்கு மணல் உள்ளது. அங்கே மலிவான விலையில் மணல் கிடைப்பதால் அதனை இறக்குமதி செய்து இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். மணல் அள்ளியதால் பள்ளமான நீர்நிலைகளிலும் மணலைக் கொட்ட வேண்டும். மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை மூடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 8 மாதங்களுக்கும் மேலாக தேர்தல் நடத்தாமல் இருப்பது சட்டவிரோதமானது. பணப்பட்டுவாடா நடந்தால் பணம் கொடுத்த வேட்பாளர்களை கைது செய்யலாம். ஆனால் தேர்தலையே நிறுத்தியிருப்பது தவறு. இந்தியாவில் பணப்பட்டுவாடா நடக்காத தொகுதிகளே இல்லை. டிச. 21-ம் தேதி ஆர்.கே. நகரில் தேர்தல் நடத்தும்போது டிச. 24-ம் தேதி வரை வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும். இதில் சந்தேகம் உள்ளது. ஏதேனும் காரணத்தைக் கூறி தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் நடந்து முடிந்தால் மட்டுமே நிச்சயம். அதுவரை தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகம் தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு கூடி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கும். இதேபோல உள்ளாட்சி தேர்தல்களையும் விரைவில் நடத்த வேண்டும்'' என்றார் தா.பாண்டியன்.