மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருது பிரபல மிருதங்கக் கலைஞரும் வாய்ப்பாட்டுக் கலைஞருமான டி.வி.கோபால கிருஷ்ணனுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி தெரிவித்திருப்பதாவது:
மியூசிக் அகாடமியின் 88-வது இசை, நாட்டிய விழா வரும் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 2015 ஜனவரி 1-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதையொட்டி மியூசிக் அகாடமியின் செயற்குழுக் கூட்டம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை புகழ்பெற்ற மிருதங்க வித்வானும், கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசையில் சிறந்து விளங்கும் மேதையுமான டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்குவதாக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற விருதுகளுக்கான பெயர்களும் முடிவுசெய்யப்பட்டுள்ளன. ‘சங்கீத கலா ஆச்சார்யா’ விருது வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் மங்காடு கே.நடேசன், அலமேலு மணி ஆகியோருக்கும், ‘டி.டி.கே. விருதுகள்’ வாய்ப்பாட்டுக் கலைஞர் மல்லாடி சூரிபாபு, நாமசங்கீர்த்தனக் கலைஞர் உடையாளூர் கல்யாணராமன் ஆகியோருக்கும், ‘இசைப் பேரறிஞர்’ விருது டாக்டர் பத்மா மூர்த்திக்கும், வயலின் இசைக்கான ‘பாப்பா வெங்கடராமய்யா’ விருது லால்குடி ராஜலட்சுமிக்கும் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகள் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வழங்கப்படும்.
‘நாட்டிய கலா ஆச்சார்யா’ விருது புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரும் நடன குருவுமான லீலா சாம்சனுக்கு வழங்கப்படுகிறது.
மியூசிக் அகாடமியின் நாட்டிய விழா தொடங்கும் நாளான 2015-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி இந்த விருது வழங்கப்படும். இவ்வாறு மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி தெரிவித்துள்ளார்.