திருப்பத்தூர்: விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு தாமாக முன் வந்த ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (ஜூலை 20) நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது, ‘‘எதிர்க்கட்சியாக அதிமுக செய்ய வேண்டிய வேலைகளை சிறப்பாக செய்து வருகிறது. தமிழக மக்களின் மனநிலை புரிந்துகொண்டு மக்களுக்காக ஆளுநர் ரவி குரல் கொடுக்கிறார்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டதால், தானாக முன் வந்து ராஜினாமா செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களில் திமுக அரசை மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது திமுகவுக்கு தெரிகிறதா என தெரியவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விஷன் 2023 என்ற தொலை நோக்கு திட்டங்களை கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் தமிழகத்தில் அனைத்து வளர்ச்சிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றால் இன்னும் ஐந்து ஆண்டுகள் தேவைப்படும். அதிமுக ஆட்சியில் தான் 11 மருத்துவக் கல்லுாரிகள் ஒரே ஆண்டில் கொண்வரப்பட்டது. எந்த மாநிலத்திலும் இது இல்லை. திமுக ஆட்சியில் லஞ்சம் வாங்குவது சில்லரை கடை போல மாறிவிட்டது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் பெருகி விட்டது.
நீதிமன்றங்களில் வழக்கை சந்திக்க அதிமுகவினருக்கு திராணி உள்ளது என்பதால் நாங்கள் அதை சந்தித்தோம். எங்களுக்கு ரெய்டு வந்தபோது, அரசு அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். சட்டத்தை நாங்கள் மதித்தோம். நீதிமன்ற உத்தரவையும் நாங்கள் மீறவில்லை. மடியில் கனமில்லை, அதனால், வழியில் எங்களுக்கு பயமில்லை என இருந்தோம்.
திமுகவினருக்கு மடியில் கனம் உள்ளது. அதனால் ரெய்டு என்றாலே பயப்படுகிறார்கள். வாக்களித்த மக்கள் மீது திமுகவுக்கு ஒரு அக்கறையும் இல்லை. ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற முதல்வர் துடிக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் திமுக ஆட்சி நடந்தி கொண்டிருக்கிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் 520 வாக்குறுதிகளை திமுகவினர் கொடுத்தார்கள். எந்த மாநிலத்திலும், எந்த முதல்வரும் இத்தனை வாக்குறுதிகள் கொடுத்ததில்லை. வாக்குறுதிகள் கொடுத்தார்கள் சரி, அதை நிறைவேற்றினார்களா? இல்லையே, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்த்த மாட்டோம், விலை குறைப்பதற்காக நாங்கள் பாடுபடுவோம் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுத்தார்களே அது என்ன ஆனது ? இப்போது அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. நடுத்தர மக்கள், ஏழை, எளிய மக்கள் அன்றாடம் நாளை கடத்தவே சிரமப்படுகின்றனர.
அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி கட்டணம் உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு என அனைத்தும் உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் காய்கறி விலையை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்து விலைவாசியை நாங்கள் கட்டுப்படுத்தினோம்.
திமுகவினர் தமிழகத்தை திராவிட நாடாக மாற்றுவதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் திமுக நாடாக மாற்றிவிடுவார்கள். அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் திமுக ஆட்சி 5 சதவீதம் கூட நடத்த முடியவில்லை.காவல் துறையை திமுகவினர் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை, காவல் துறையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இதையொல்லம் மக்கள் கவனித்து வருகின்றனர். வரும் தேர்தலில் அதற்கான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்’’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.