கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. உடன், கட்சி நிர்வாகிகள். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

என்டிஏ 330 இடங்களில் வெற்றி; அதிமுக தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி: பழனிசாமி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை/ கோவை: தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களில் வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் பங்கேற்ற பழனிசாமி, டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். அந்த தலைவர்களின் வழியில்தான் இப்போதும் அதிமுக செயல்படுகிறது. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது சூழலுக்கு தக்கவாறு அமைவது. எனவே, சூழலுக்கு தக்கவாறு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டில் திமுககூட பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. எங்கள் கூட்டணியில் சுதந்திரமாக செயல்படலாம். திமுக கூட்டணியில் அடிமையாகத்தான் இருக்கவேண்டும்.

தனித்தன்மை உள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை ஏற்பது அதிமுகதான். டெல்லியில் நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில், கட்சிப் பாகுபாடு இல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும் பாஜக உரிய மரியாதை கொடுத்தது.

தேசிய ஜனநாயக கூட்டணி 9 ஆண்டுகளை கடந்து, சிறப்பாக ஆட்சிபுரிந்து வருகிறது. பிரதமர் மோடி, இந்தியர்களின் பெருமையை உலக அளவில் உயர்த்தி உள்ளார். இளைஞர்களின் தேவையை அறிந்து மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. எனவே, வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களில் வெற்றி பெறும்.

ஊழலுக்காகவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார். அமைச்சர் பொன்முடி குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அதனால், எங்களை பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை. நான் ஊழல் செய்ததாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது உண்மைக்கும், நீதிக்கும் கிடைத்த தீர்ப்பு. அவர் பொய் வழக்கு தொடர்ந்தார் என்பதற்கு இதுவே உதாரணம். அதிமுக அரசு மீது குற்றம் சுமத்துவதற்காகவே கோடநாடு விவகாரத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், கோவை வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘மக்களவை தேர்தலை மையமாக வைத்துதான் மகளிர் உரிமைதொகை திட்டத்தை முதல்வர்அறிவித்துள்ளார். தேர்தலின்போது, அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் வழங்கப்படும்என்று கூறிவிட்டு, இப்போது பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். மருத்துவமனை சென்று செந்தில் பாலாஜியை முதல்வர் சந்தித்தது ஆறுதல் சொல்வதற்காக அல்ல. அவர் ஏதேனும் சொல்லி,ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான்’’ என்றார்.

‘‘தே.ஜ. கூட்டணியில் அதிமுக இருந்தாலும், தமிழகத்தை பொருத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை தாங்கும்’’ என்பதை கோவையிலும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT