சென்னை: தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட ஆலோசனைக் கூட்டம், கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்களை வீடுகளுக்கு சென்று சேர்க்கும் பணியை கூட்டுறவுத் துறையினர் செய்து வருகின்றனர்.
முதல்கட்டமாக ஜூலை 24-ம் தேதியில் இருந்து முகாம்கள் தொடங்க இருப்பதால், 23-ம் தேதி வரை நியாய விலைக்கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்குவார்கள். 24-ம் தேதியில் இருந்து முகாம் நடைபெறும் இடத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்கலாம். ஆகஸ்ட் 4-ம் தேதி வரை இப்பணி நடைபெறும். 2-ம் கட்டமாக ஆக.5 முதல் முகாம் நடத்தப்படும்.
தமிழகத்தில் 21 லட்சம் பயனாளிகள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. நியாய விலைக் கடை பணியாளர்களே வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும்போது இதற்கான பணிகளையும் சேர்த்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் தற்போது 1 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் கூடுதலாக 15 லட்சம் கணக்குகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மின்கட்டண ரசீது வேண்டாம்: இத்திட்டத்தின் கீழ் பயனாளியாக இருப்பவர் மறைந்தால், குடும்பத்தில் வேறு ஒருவருக்கு பெயர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதா? மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாடு, வாடகைதாரர்கள் மின்பயன்பாடு ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கூட்டுறவுத் துறை செயலர் டி.ஜெகந்நாதன் கூறியதாவது: இத்திட்டத்தில் தெளிவான விதிமுறைகள் வெளியிடப்பட்டு, ஆட்சியர்களும் விதிமுறைப்படி பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பிரச்சினைகள் வந்தால் தீர்ப்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் கருவிகள் நியாயவிலைக் கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ளன.
வரும் 24-ம் தேதி முதல் முகாம்நடைபெறும் இடங்களில் பயோமெட்ரிக் கருவிகள், கைபேசிகள் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை வழங்கியுள்ளது. 2.24 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.
மின் பயன்பாடு என்பது பயனாளிகளுக்கான தகுதிகளில் ஒன்று. அதற்கான கட்டண ரசீது தேவையில்லை. விண்ணப்பத்தில் மின் இணைப்பு எண்ணை மட்டும் பதிவுசெய்தால் போதுமானது. தரவுகள் நம்மிடம் இருப்பதால் அதைக் கொண்டு சரி பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.