சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிறுநீரகப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளப்படுவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
தேசிய நல்வாழ்வுக் குழும நிதிப் பங்களிப்புடன், சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை, சமூக நோய் தொற்றுத்துறை இணைந்து கடந்த ஆண்டு தமிழகத்தில் சிறுநீரகப் பாதிப்புகள் குறித்த தகவல்களைத் திரட்டும் கள ஆய்வை மேற்கொண்டது.
ஆய்வுப் பணி: பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் 500 பேர், தமிழகம் முழுவதும் இதுகுறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். மொத்தம் 4,682 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பொது சுகாதாரத் துறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
அதில், இணை நோய்களின் தாக்கம் இல்லாத 53 சதவீதம் பேருக்கு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா பணிகளில் ஈடுபடுபவர்கள். இதையடுத்து, விவசாயப் பணிகளில் ஈடுபடுவோரின் சிறுநீரக செயல்திறனை அறிவதற்கான ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறுநீரகப் பாதிப்புகளை ஆரம்ப நிலையில் அறிவதற்கான பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பொதுமக்களுக்கு சிறுநீரகப் பாதிப்புகளை ஆரம்ப நிலையில் அறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைக்கு வருவோரின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் புரதம் அதிகமாக இருக்கிறதா என்பது உடனே பரிசோதனை செய்யப்படும். அப்படி இருந்தால், அடுத்தகட்டமாக யூரியா, கிரியாட்டினின் போன்ற அளவுகள் பரிசோதனை செய்யப்பட்டு, சிறுநீரகவியல் மருத்துவ நிபுணரின் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும்.
இதன்மூலம், ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.டயாலிசிஸ் சிகிச்சைகளை தவிர்க்க முடியும். இணைநோயாளிகள், வெயிலில் பணியாற்றும் விவசாயிகள், கட்டுமானத் தொழி லாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.