புதுக்கோட்டை: அறந்தாங்கியில் அங்கன்வாடி மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு நேற்று குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அப்போது, மேற்கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த ரமலா பேகம்(30), இவரது 10 மாத ஆண் குழந்தை மற்றும் அங்கன்வாடியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 3 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கன்வாடி மையத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வருவாய்த் துறை, நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீஸார் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறியது: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையக் கட்டிடம் பழுதடைந்து இருப்பது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல், ஆங்காங்கே சுவர், மேற்கூரையில் இருந்த வெடிப்புகளுக்கு மட்டும் சிமென்ட் பூசிவிட்டு, பெயின்ட் அடித்துச் சென்றுவிட்டனர்.
நகராட்சி அலுவலகத்தின் அருகிலே இருந்தும்கூட இந்தக் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படவில்லை. பழுதடைந்த இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.