நாமக்கல்: மணல் குவாரிகளில் போலி ரசீது மூலம் முறைகேடு நடக்கிறது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் கே.ராஜசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பொதுப்பணித்துறை மூலம் 13 மணல் குவாரிகள் செயல்படுகின்றன. குவாரிகளில் மணல் எடுக்க ஆன்லைனில் பதிவு செய்யும் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வரிசைப்படி மணல் வழங்க வேண்டும்.
மேலும், 10 சக்கர லாரிகளுக்கு 3 யூனிட் மணல் ரூ.7,950-க்கும், 6 சக்கர லாரிகளுக்கு 2 யூனிட் மணல் ரூ.5,300-க்கும் வழங்க வேண்டும். ஆனால், நேரடியாக கூடுதலாக பணம் பெறப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு குறைவான விலையில் மணலை வழங்க முடிவதில்லை.
தினசரி ஒரு குவாரியில் ஆன்லைனில் பதிவு செய்த சுமார் 10 முதல் 15 வாகனங்களுக்குக் கண் துடைப்பாக பொதுப்பணித் துறை மூலம் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு குவாரியிலும் தினசரி 500 முதல் 700 லாரிகளுக்கு மணல் லோடு செய்யப்படுகின்றன.
இதற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு நேரடியாகப் பணம் பெற்று, போலி ரசீது வழங்கப்படுகிறது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அனைத்து லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், பொறியாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து மணல் குவாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். மேலும், தமிழக ஆளுநர் மற்றும் நீதிமன்றத்தையும் நாடுவோம் என்றார்.
பேட்டியின்போது, செயலாளர் ஆர்.முருகேசன், பொருளாளர் கே.பரமசிவம் , திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சந்திரன், செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.