தமிழகம்

கோவையில் 12 ஆவின் பாலகம் இடித்து அகற்றம்

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் 12 ஆவின் பாலகங் கள் இடித்து அகற்றப்பட்டன.

கோவை மாவட்டத்தில் செயல்படும் ஆவின் பாலகங்களில், ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படாமல், டீ, காபி, வடை, பஜ்ஜி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அனைத்து ஆவின் பாலகங்களின் உரிமத்தையும் ரத்து செய்து நிர்வாகம் அறிவித்தது.

இருப்பினும், ஆவின் பெயரில் கடைகள் தொடர்ந்து விதிமீறி செயல்படுவது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆவின் கடைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறும்போது, ‘‘ஆவின் பெயரில் விதிமீறல்கள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.

மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறும்போது, ‘‘கொடிசியா அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஆவின் பாலக கடை இடித்து அகற்றப்பட்டது. மொத்தம் 12 ஆவின் கடைகள் அகற்றப்பட்டுள்ளன’’ என்றார்.

வரும் நாட்களில் மாவட்டம் முழுவதும் செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT