தமிழகம்

மேட்டூர் அரசு மருத்துவமனையில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடம் அருகே தேங்கிக் கிடக்கும் மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

மேட்டூரிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு, பொது மருத்துவம், எலும்பு முறிவு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகள் செயல்படுகின்றன. தினமும் 500-க்கும் மேற்பட்டோர் உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 20-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உள் நோயாளிகள் பிரிவில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு பிறகு வெளியேற்றப்படும் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், பஞ்சு, பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்ற கழிவுகள் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக் கூடம் அருகே கொட்டப்படுகின்றன.

அவை முறையாக அகற்றப்படாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. பிரேதப் பரிசோதனைக் கூடம் அருகே உள்நோயாளிகள் பிரிவு, நுண்ணுயிரியல் ஆய்வகம் உள்ளதால், இங்கு வரும் நோயாளிகள், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT