சென்னை: தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டலக் குழு கூட்டத்தில், சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல கூடுதல் மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் பங்கஜ் தெரிவித்தார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டலக் குழு கூட்டம் அதன் தலைவரான தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் எம்.நசிமுதின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல கூடுதல் மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் பங்கஜ் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
தமிழகத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, உறுப்பினர்களின் குறைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
``உறுப்பினர்களின் குறைகளை தீர்ப்பதற்காக மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர்-2 நியமிக்கப்பட்டு குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு வரப்படுகிறது. நிறுவன உரிமையாளர்கள் இணையதளத்தில் உரிமையாளர்கள் பதிவு செய்வது தொடர்பாக 200 உரிமையாளர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் குறிப்பாக, வேண்டுமென்றே செலுத்தாத நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம், 1952-ன் கீழ் தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும். அது குறித்து விளம்பரம் செய்யப்படும்'' என்று ஆணையர் பங்கஜ் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.