மேட்டூர் அருகே கோனூர் கிராமத்தில் மானாவாரி நிலத்தில் கேழ்வரகு பயிர் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.   
தமிழகம்

மேட்டூர் | ஆடிப்பட்டத்தில் கேழ்வரகு நடும் விவசாயிகள் - மானாவாரி நிலங்களில் தொடங்கியது பணி

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அருகே ஆடிப்பட்டத்தில் மானாவாரி நிலத்தில் கேழ்வரகு பயிர் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்று வட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி இன்றி நிலத்தடி நீரையும், மழையும் நம்பி மானாவாரி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணை அருகில் இருந்தும் அணை நீரை பயன்படுத்த முடியாமல் மானாவாரி விவசாயத்தில் அதிகமாக ஈடுபடுகின்றனர். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு ஏற்ப மேட்டூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் ஆண்டுதோறும் கேழ்வரகு, கரும்பு, வாழை, நிலக்கடலை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.

தற்போது, ஆடிப்பட்டத்துக்கு நிலங்களை தயார்படுத்தும் வகையில், ஏற்கெனவே விவசாய நிலங்களில் சுழல் கலப்பை, சட்டி கலப்பை கொண்டு உழவு செய்து, கால்நடைகள் சாணம் போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில், தற்போது கரீப் பருவம் முடியும் தருவாயில், ராபி பருவம் தொடங்க உள்ள நிலையில் ஆடிப்பட்டத்தின் முதற்பட்டமாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது.

மேட்டூர் அருகே கோனூர் கிராமத்தில் விவசாயிகள் 202 ரக கேழ்வரகு பயிர் நாத்து விட்டு, 25 நாட்களுக்கு பிறகு ஆடிப்பட்டத்தில் நிலத்தடி நீரை கொண்டு கேழ்வரகு பயிர் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு 25,000 வரை செலவு செய்து 90 நாட்களில் அறுவடை செய்ய ஏதுவாக தற்போது நடவு பணி நடைபெற்று வருகிறது.

தற்போது உள்ள கால சூழ்நிலைக்கு பருவமழையை எதிர்நோக்கியும், உரிய காலத்தில் மழை பொழியும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, கரும்பு, நிலக்கடலை, சோளம் உள்ளிட்டவை பயிர் தொடங்குவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT