சேலம்: சேலம் - ஈரோடு சாலையில் சங்ககிரி பகுதியில் எச்சரிக்கை பலகையின்றி ஏராளமான வேகத்தடைகள் இருப்பதாலும், போதிய தெரு விளக்குகள் இல்லாததாலும் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆட்டோ நகரம் என்ற சிறப்பு பெயருக்கு உரியது, சேலம் மாவட்டம் சங்ககிரி. லாரி சார்ந்த தொழில்கள் நிறைந்த சங்ககிரி, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட மலைக்கோட்டை மற்றும் நினைவுச் சின்னம் ஆகியவற்றை கொண்ட தொன்மையான நகரமாகும்.
சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சங்ககிரி அமைந்துள்ளதால், போக்குவரத்து முக்கியத்துவம் கொண்ட நகரமாகவும் இருக்கிறது. குறிப்பாக, சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு செல்ல வேண்டுமானால் சங்ககிரி வழியாகவே செல்ல முடியும். தினமும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சங்ககிரி வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில், இங்குள்ள சாலையை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியது: சங்ககிரியில் லாரிகளும், அவற்றை பழுது பார்க்கும் பணிமனைகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எனவே, சங்ககிரியில் எப்போதும் லாரிகள் போக்குவரத்து அதிகமிருக்கும். மேலும், சேலம்- ஈரோடு சாலையில் உள்ளதால், பேருந்துகள், கார்கள் ஆகியவற்றின் போக்குவரத்தும் 24 மணி நேரமும் இருக்கும்.
இதன் காரணமாக, விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க, சங்ககிரியில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை குறித்த எச்சரிக்கை பலகை, பல இடங்களில் வைக்கப்படவில்லை. வேகத்தடைகள் இருப்பது பகலில் ஓரளவுக்கு தெரிவதால், பலர் தடுமாற்றமின்றி வாகனத்தை இயக்கிவிடுகின்றனர். ஆனால், இரவில் சில நூறு மீட்டர் தொலைவுக்குள் அடிக்கடி எதிர்படும் வேகத்தடைகளை எதிர்கொள்ள முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுவது அடிக்கடி நிகழ்கிறது.
குறிப்பாக, வேகத்தடையை திடீரென கவனித்து, ஒரு வாகனம் பிரேக் போடும்போது, அதனை பின்தொடர்ந்து வரும் வாகனம், திடீரென நிறுத்த வழியின்றி முன்னால் செல்லும் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. எனவே, வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், இரவில் ஒளிரும் வகையிலான முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.
வேகத்தடைகள் மீது, கருப்பு- வெள்ளைக் கோடுகள் வரைய வேண்டும். இதேபோல, சங்ககிரியில் சேலம்- ஈரோடு சாலை நெடுகிலும் தெரு விளக்குகளின் எண்ணிக்கை பற்றாக்குறையாகவே உள்ளது. இதனால், இரவில் தெளிவாக பார்க்க முடியாத அளவுக்கு பல இடங்களில் சாலை இருளடைந்து காணப்படுகிறது.
சாலையில் ஆங்காங்கே குறுக்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில், இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள் குறுக்கிடும்போது, அதனை வாகன ஓட்டிகளால் தெளிவாக காண முடியாமல், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், இரவில் திருட்டு அச்சமும் உள்ளது. எனவே, குறுக்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில், உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும்.
சாலை நெடுகிலும் சென்டர் மீடியனில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையில் வெள்ளைக் கோடுகள் வரைய வேண்டும். மக்களை விபத்தில் இருந்து காக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சங்ககிரியில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக சாலையை அமைக்க வேண்டும், என்றனர்.