புதுச்சேரி: மருத்துவக் கல்வி சேர்க்கையில், புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு தர முதல்வர் ரங்கசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை அளித்துள்ளார்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
இந்தச் சூழலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. அதற்கு முன்பாகவே ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றிருந்தார். அவர் பொறுப்பேற்ற நிலையில் நாள் முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் 10 சதவீத ஒதுக்கீடு தரும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. 2 ஆண்டுகளாக பல தரப்பினரும் இதை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட பரிசீலிக்கும்படி முதல்வர் ரங்கசாமிக்கு பரிந்துரைத்துள்ளார். இத்தகவலை ஆளுநர் தமிழிசை சென்னையில் உள்ள வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வழக்கத்துக்கு மாறானது
இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வழக்கமாக, முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ஒன்றை முடிவெடுத்து, அதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, பின் ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பப்படும் ஆளுநர் அதை உள்துறைக்கு அனுப்புவார். அதன் பின்னர் நடைமுறைக்கு வரும்.
ஆனால் தற்போது ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியிடம் பரிசீலனை செய்யும்படி பரிந்துரை செய்துள்ளார். இது வழக்கத்துக்கு மாறாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.