தமிழகம்

2 ஆண்டு அனிமேஷன் பட்டயப் படிப்பு விரைவில் தொடக்கம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் அனிமேஷன் மற்றும் விஷூவல் எபெக்ட் என்ற புதிய 2 ஆண்டு பட்டயப் படிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

சென்னையில் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் 54 பேருக்கு இலவச மடிக்கணினிகளை செவ்வாய்க்கிழமை வழங்கி அவர் பேசியதாவது:

இக்கல்லூரியில் திரைப்படக் கல்வி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் அனிமேஷன் மற்றும் விஷூவல் எபெக்ட் என்ற 2 ஆண்டு பட்டயப் படிப்பு பாடப் பிரிவினை புதியதாக அறிமுகப்படுத்த ரூ.9.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் புதிய பாடப் பிரிவுக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை விரைவில் முதல்வர் ஜெயலலிதா திறக்க உள்ளார். இந்நிறுவன வளாகத்தில் திரைப்படத் துறையினரும், கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் 2.5 ஏக்கரில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய முழுவதும் குளிரூட்டப்பட்ட 2 படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட உள்ளது. இக்கல்லூரியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் முன்னாள் முதல்வரும், திரைப்படத் துறையின் சாதனையாளருமான எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவு திருவுருவச் சிலையும், கல்லூரி நுழைவு வாயிலும் அமைக்கப்படவுள்ளது. திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்கி பயில வசதியாக புதிய மாணவர் தங்கும் விடுதி கட்டுவதற்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு, தற்போது விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, வேளச்சேரி எம்எல்ஏ எம்.கே.அசோக், செய்தித்துறை கூடுதல் இயக்குநர் டி.கே.புகழேந்தி, திரைப்படக் கல்லூரி முதல்வர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT