தாம்பரம்: பயன்பாடு இல்லாமல் இருந்த தாம்பரம் சுரங்க நடைபாதை மீண்டும் திறக்கப்பட்டது. தாம்பரத்தில் மேற்கில் இருந்து கிழக்கு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடந்து வந்தனர். இதனால் அவ்வப் போது விபத்துகள் ஏற்பட்டு வந்தன.பொதுமக்களின் வசதிக்காக மேற்கு-கிழக்கு பகுதிகளை இணைக்கும் வகையில் நடை சுரங்கப்பாதை கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து இந்து மிஷன் மருத்துவமனை எதிரே ரூ.3 கோடி செலவில் நடைசுரங்கப்பாதை கட்டப்பட்டு 2019-ல் திறக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே மக்கள் பயன்படுத்தினர். பின் முறையான பராமரிப்பு இல்லாததால் மக்கள் பயன்படுத்த அச்சப்பட்டனர். இதன் காரணமாக மூடப்பட்ட சுரங்கப்பாதை மூன்று ஆண்டுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதனால் ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்கும் சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளன.
அதனால் சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதில் கடந்த ஜனவரி மாதம், குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு மையம், கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சுரங்கப்பாதை நுழைவாயிலுக்கு மவுன அஞ்சலி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து சுரங்க நடைபாதையை பராமரிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து சுரங்கப்பாதை சுத்தம் செய்யப்பட்டு புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சுரங்க நடைபாதையை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார். உடன் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உட்பட பலர் இருந்தனர்.
தற்போது திறக்கப்பட்ட சுரங்க பாதையை ரயில்வே நிர்வாகமும் தாம்பரம் மாநகராட்சி இணைந்து முறையாக பராமரிக்க வேண்டும், ரயில்வே தண்டவாளத்தை மட்டும் கடக்கும் வகையில் உள்ள இந்த சுரங்கப் பாதையை ஜிஎஸ்டி சாலையை கடக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த கோரிக்கையை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்ற நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே இந்து தமிழ் திசை நாளிதழில் விரிவான செய்து வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.