தமிழகம்

முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘முதல்வர் மாநில இளைஞர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இதில் விருதுடன், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு முதல்வர் மாநில இளைஞர் விருது, ஆக. 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளுக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி, பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT