அரசுப் பள்ளிகளில் படித்து சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பொறியியல் சேர்க்கையில் முன்னுரிமை தரமுடியுமா என்ற கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு:
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்):
தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகம் கேபிடேஷன் ஃபீஸ் கட்டி சேர வேண்டியுள்ளது. அதனால், எனது தொகுதியான வால்பாறையில் மாசாணியம்மன் தேவஸ்தானம் மூலம் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்:
தமிழகத்தில் மொத்தம் 2,88,486 பொறியியல் இடங்கள் உள்ளன. இதில், ஒற்றைச்சாளர முறையில் 1,52,451 இடங்கள் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதுதவிர, இந்த ஆண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகள் 28 ஆயிரம் இடங்களை, அரசு ஒதுக்கீட்டுக்குக் கொடுத்து குறைந்த கட்டணத்திலேயே மாணவர் களை சேர்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளன.
நடப்பாண்டில் அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் 2,11,385 இடங்கள் உள்ளன. இதற்கு 1,69,750 பேர் விண்ணப்பித்துள்ளனர். 1.42 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
கவுன்சலிங்குக்கு ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேரை அழைத்தால், 3 ஆயிரம் பேர்தான் வருகின்றனர். மாணவர்களின் மனநிலை இப்போது மாறிவருகிறது. கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் இதர தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேருவதில் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாலபாரதி (மார்க்சிஸ்ட்):
ஏழைகள் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதே நம் அனைவரது நோக்கம். அதனால், பொறியியல் கல்லூரி சேர்க்கையின்போது, அரசுப் பள்ளிகளில் படித்து சிறந்த மதிப்பெண் பெறுவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான், அரசுப் பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படும். இதற்கு அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர்:
பொறியியல் சேர்க் கைக்கு ஏற்கெனவே நுழைவுத் தேர்வு இருந்தது. கிராமப்புற மாணவர் களுக்கு ஏற்படும் பிரச்சினை களைக் கருத்தில் கொண்டே நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கும் நடை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
மாணவர்களை தனியார் பள்ளியில் படித்தவர், அரசுப் பள்ளியில் படித்தவர் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. அப்படி செய்தால் ஒரு தரப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.