தமிழகம்

டிச.21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த மார்ச்சில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்த நிலையில், பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடத்தப்படும் என்று நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை ஆணையம் செய்து வந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்புக்கு நேற்று (வியாழக்கிழமை) இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் தேதி இன்று அல்லது நாளை வெளியாகலாம் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், எதிர்பார்த்தபடியே தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

டிசம்பர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல்: நவம்பர் 27

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: டிசம்பர் 4

வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 5

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: டிசம்பர் 7

வாக்குப்பதிவு: டிசம்பர் 21

வாக்கு எண்ணிக்கை: டிசாம்பர் 24

மேலும் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்:

தமிழகத்தின் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறும் டிசம்பர் 21-ம் தேதியே உத்தரப் பிரதேசத்தின் சிகந்தரா தொகுதி, அருணாச்சலப் பிரதேசத்தின் பக்கே-கசாங், லிக்பாலி தொகுதிகள் மேற்குவங்கத்தின் சபாங் ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் இரண்டு தொகுதிகளுமே ரிசர்வ் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT