தமிழகம்

சாதி சான்றிதழ் வழங்குவதில் திருப்பத்தூர் ஏன் பின்தங்கியுள்ளது? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வந்தார்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

கூட்டத்தில் என்ன விவாதிக்கப் பட்டது? என திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, "மாவட்டத்தில் சாதிச் சான்று உட்பட பல்வேறு சான்றுகள் வழங்குவதில் மாவட்டம் சற்று பின் தங்கியுள்ளது. இதற்கு என்ன காரணம் என அமைச்சர் கேட்டார். அதற்கு கோட்டாட்சியர்கள் பானு (திருப்பத்தூர் ), பிரேமலதா (வாணியம்பாடி) ஆகியோர் ‘விரைந்து கொடுத்து கொண்டிருக்கிறோம்’ என பதிலளித்தனர்.

‘ஆதரவற்ற விதவை சான்று வழங்கலில், மாவட்டத்தில் 10 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதே?’ என அமைச்சர் கேட்டார். அதற்கு கோட்டாட்சியர்கள், ‘அவர்கள் விண்ணப்பிக்கும் போது தவறான தகவல்களை வழங்கியுள்ளனர். அதனால் அந்த விண்ணப்பங்களை அனுமதிக்க முடியாத நிலை உள்ளது’ என பதிலளித்தனர்.

‘கலைஞர் மகளிர் உரிமை திட்ட பணிக்கான முன்னேற்பாடுகள் எப்படி நடந்து வருகிறது? தேவையான பயோ மெட்ரிக் கருவிகள் இருப்பில் உள்ளதா?’ என அமைச்சர் கேட்டார். அதற்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ‘மாவட்டத்தில் 500 பயோமெட்ரிக் கருவிகள் இருப்பில் உள்ளன. உரிமை தொகையில் யார், யாருக்கெல்லாம் நிதி கிடைக்காது என்ற பட்டியல் அதிகம் மக்கள் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவருக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது என்ற தகவல், அவர்களின் மனதை புண்படுத்தாத வகையில் தெரிவிக்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

‘இ-சேவை மையங்கள் எம்எல்ஏக்கள் அலுவலகத்தில் இயங்கலாம் என்ற விதி உள்ளது. அதை இங்கு எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள்?’ என அமைச்சர் கேட்டார். அதற்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ‘அதற்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் அமல்படுத்தப்படும்’ என்றார்.

இதற்கிடையே வேலுார் எம்பி கதிர் ஆனந்த் பேசுகையில், ‘எங்கள் தொகுதியில் அனைத்து வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரை இ-சேவை மையம் வேண்டும் என விண்ணப்பிக்குமாறு அறிவறுத்தியுள்ளோம். அப்படி அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் வார்டுக்கு ஒரு இ-சேவை மையம் தொடங்கப்படும். இதனால் மக்கள் கால்கடுக்க நின்று, அலைந்து திரிய தேவையில்லை’ என்றார். ‘கலைஞர் மகளிர் உரிமை திட்ட பணிக்கான முன்னேற்பாடுகள் எப்படி நடந்து வருகிறது?

SCROLL FOR NEXT