‘‘தமிழகப் பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப 3 வாரங்களில் பணி ஆணை வழங்கப்படும்’’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில், 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி கவன ஈர்ப்பு அறிவிப்பைக் கொடுத்திருந்தார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் வீரமணி கூறியதாவது:
கடந்த 2012-ல் ஆசிரியர் தேர்வுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில், 7,14,526 பேர் தேர்வெழுதி, 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், மீண்டும் தேர்வு நடத்தியதில், 19,261 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2013ல் நடந்த தேர்வில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதிய 2,62,187 பேரில், 12,596 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதற்கிடையே, தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பதை இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விழுக்காடு குறைத்து நிர்ணயம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
அதனால், ஏற்கெனவே தேர்ச்சி பெற்றிருந்த 43,183 பேருடன் கூடுதலாக 43,183 பேர் என மொத்தம் 72,701 பேரின் கல்விச் சான்று சரிபார்ப்புப் பணி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப 3 வாரங்களில் பணி ஆணை வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.