அண்மையில் கோவை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் உள்ளூரில் இருந்தும்கூட அவர்களுக்கு ஏதும் தெரிவிக்காமல் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக ஆளுநரின் நடவடிக்கை, கூட்டணி, தமிழகத்துக்கான பாஜகவின் அரசியல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் 'தி இந்து' ஆங்கிலம் நாளிதழுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியின் சில பகுதிகள் இங்கே.
ஆளுநர் பன்வாரிலாலின் ஆய்வுக்கூட்டத்தை தமிழக பாஜக ஆதரித்துள்ளது. இதேபோல் பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர் தலையீடு இருக்குமாயின் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
ஆக்கபூர்வமான எண்ணங்களை முன்வைக்கும் போதெல்லாம் ஆளுநரை நாங்கள் நிச்சயம் ஆதரிப்போம். இங்கே ஆளுநர் அரசு நடவடிக்கைகளில் ஏதும் குறுக்கீடு செய்யவில்லை. அவர் உறுதுணையாக மட்டுமே இருக்கிறார். கூடுதல் அக்கறையுடன் செயல்படுகிறார். மாநில நலனுக்காக தேவைப்பட்டால் அவர் தலையிடவும் செய்யலாம். மேலும், ஆளுநர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாரே தவிர அவர் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதை எல்லாம் குறித்து கவலைப்பட வேண்டியது முதல்வர்தான். ஆனால், அவரே மவுனமாக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் ஏன் கவலைப்படுகிறார் என்று தெரியவில்லை.
ஆளுநர் ஏற்கெனவே அரசியலமைப்பின் உயர் பதவியில் இருக்கிறார். அதனால், இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் அவருக்கு எவ்வித லாபமும் இல்லை. இந்த சர்ச்சையெல்லாம் விடுத்து அவரது தமிழ் படிக்கும் முயற்சியை நாம் பாராட்டலாமே.
சமீபத்திய ஐடி ரெய்டுகளுக்காக எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சித்துள்ளனவே..
அந்தக் குடும்பத்தைச் சுற்றி கால் நூற்றாண்டுக்கு மேலாக சர்ச்சைகள் நிலவுகின்றன. அவர்கள் மக்கள் பணத்தை சுரண்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அந்தக் குடும்பத்தினர் மீது ரெய்டு நடந்தபோது எல்லோரும் வருமான வரித்துறை மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நியாயமாக எல்லோரும் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்க வேண்டும்.
பிரதமரின் சென்னை வருகைக்குப் பின்னர் பாஜகவின் தமிழக வியூகம் மாறியிருப்பதாக சொல்கிறார்களே? ஆனாலும், திமுகவை தொடர்ந்து தாக்குகிறீர்களே?
அது தாக்குதல் அல்ல. தமிழகத்தின் மீதான எங்கள் அக்கறையின் வெளிப்பாடு. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே எங்கள் தோழமை கட்சிகளாக இருந்துள்ளன. அரசியலில் நிரந்தர எதிரியோ நண்பரோ இல்லை. தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை. ஸ்டாலின் ஏதாவது ஆக்கபூர்வமாக சொன்னால் நாங்கள் அதை வரவேற்போம். அரசாங்கமே நீட் பயிற்சி மையங்களை ஆரம்பிக்குமாயின் அதையும் வரவேற்போம். ஊழல் இருந்தால் அதை நிச்சயம் கண்டிப்போம். கருணாநிதியை சந்தித்தது என்பது ஆரோக்கியமான அரசியலின் அடையாளம்.
திமுகவுடன் கூட்டணி வாய்ப்பு இருக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
இது குறித்து பேசுவதற்கு இது சரியான தருணம் இல்லை. ஏனெனில் இப்போது தேர்தல் இல்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் அது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும். மற்ற எல்லா கட்சிகளும் அமைதியாக இருக்கும்போது நான் மட்டும் ஏன் கூட்டணி குறித்து பேச வேண்டும். கூட்டணியைப் பொருத்தவரை மத்திய பாஜக அதை முடிவு செய்யும். நாங்கள் எங்களது கருத்துகளை மட்டுமே முன்வைப்போம். மேலும், அது நீண்ட கால நடைமுறை. ஆனால், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பாஜக முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். பொருத்திருந்து பார்ப்போம்.
சமூக வலைதள் ட்ரால்கள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் ஒரு பெண். தேசிய கட்சியின் தலைவர். இன்னும் இப்படி நிறைய நேர்மறை விஷயங்கள் உள்ளன. நான் திறம்பட செயல்பட்டு வருகிறேன். இருந்தாலும் என் மீது தாக்குதல்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏனென்ன்றால், பாஜக தலைவர் ஒருவர் வலிமையானவராக இருப்பதை இங்கு யாரும் விரும்பவில்லை. அதனாலேயே எனது உயரம், தோற்றம், வயது, கூந்தல் என விமர்சனம் செய்கின்றனர். அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனது விக்கிப்பீடியா பக்கத்துக்குச் சென்று தமிழிசை என்பதை டுமிலிசை என மாற்றியமைத்துள்ளனர். இப்போதுகூட கண்ட நேரங்களிலும் தொலைபேசி அழைப்பு வருகிறது. இதையெல்லாம் ஓர் ஆண் அரசியல்வாதிக்கு செய்வீர்களா என்பது மட்டுமே எனது கேள்வி.