சபாநாயகரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அவைக்கு வெளியே திமுக உறுப்பினர் துரைமுருகன் கூறியதாவது:
உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது ஜனநாயக மரபு. ஆனால் உறுப்பினர்களை அமைச்சர் ஓடுகாலிகள் என்று சொல்வது அவை மரபுக்கு ஏற்றது அல்ல. எனவே, அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தோம். அமைச்சர் வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அமைச்சர் மீண்டும் 3 முறை எழுந்து ‘ஓடுகாலிகள் என்று சொல்வதில் தப்பில்லை’ என்றார். முதல்வரும் இதை கேட்டு புன்னகைத்துக் கொண்டு இருந்தார். இது அவைக்கு எதிரான வார்த்தை அல்ல என்றுதான் சபாநாயகரும் கூறுகிறார். இது ஜனநாயக மரபு, நெறிமுறைக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்கும் செயல்.
குழாயடி சண்டை நடக்கும் இடமா, சட்டப்பேரவை நடக்கும் இடமா என கேலி செய்யும் அளவுக்கு பேரவை மாறியுள்ளது. சட்டப் பேரவையில் நாங்கள் இருந்ததற்கு வெட்கப்படுகிறோம். எனவே அந்த வாசகத்தை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். எங்களை வெளியேற்றிவிட்டார்கள்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார் கூறியதாவது:
மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்துப் பேச சபாநாயகர் அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்தோம். இதற்கு அமைச்சர் ஓடுகாலி என்று கூறியுள்ளார். அமைச்சர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வற்புறுத்தினோம். ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. அமைச்சர் வைத்திலிங்கம் மீண்டும் பலமுறை ஓடுகாலிகள் என்றார். முதல்வரும் அதை கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த கட்டிட விபத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்காவிட்டால், அந்தத் துறை எதற்கு?
இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.
இதே கருத்தை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.