தமிழகம்

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி

செய்திப்பிரிவு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.155 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களை சமாளிப்பதற்காக கவுரவ விரிவுரையாளர்கள் சுழற்சி-1 பிரிவில் 5,699 பேரும், சுழற்சி-2 பிரிவில் 1,661 பேரும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டில் (2023-24) தற்காலிக விரிவுரையாளர்களுக்கு 11 மாதங்கள் தொகுப்பூதியம் வழங்க ஏதுவாக சுமார் ரூ.155 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்வரை அல்லது கல்வியாண்டின் இறுதிநாள் வரை தற்காலிகப் பணியாளர்கள் பணியில் தொடரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT