சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற கார் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் அசோகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் தனபாண்டியன், நடிகை அருணா உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன் 
தமிழகம்

சென்னையில் களைகட்டிய கார் பேரணி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற கார் பேரணியில், பல்வேறு வேடங்களை அணிந்த பெண்கள், குடும்பத்துடன் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் டச்சஸ் கிளப் சார்பில், பெண்கள் பங்கேற்கும் கார் பேரணி சென்னையில் நடத்தப்படும். இந்த ஆண்டு ‘சினிமா’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பேரணி நேற்று நடத்தப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் சவேரா ஹோட்டல் வளாகத்தில், 23-வது கார் பேரணியை ஹோட்டல் நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் அசோகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் தனபாண்டியன், நடிகை அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

சுமார் 50 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்தப் பேரணி, தி.நகர் வழியாக சிஐடி காலனி, கோபாலபுரம் பகுதிகளில் சென்று, மீண்டும் சவேரா ஹோட்டலை வந்தடைந்தது. இதில் பங்கேற்ற பெண்கள் எம்ஜிஆர், பாகுபலி, கரகாட்டக்காரன், சார்லி சாப்ளின், துப்பறிவாளர், கவுபாய் போன்ற வேடங்களை அணிந்து, காரை ஓட்டினர்.

இந்தப் பேரணியில் 110 கார்கள் பங்கேற்றன. ஒவ்வொரு காரிலும் 4 பேர் இடம் பெற்றிருந்தனர். ஒருவர் காரை ஓட்ட, மற்றொருவர் வழிகாட்டினார். மற்ற இருவரும் விநாடி-வினா போட்டிக்கான விடைகளைத் தேடினர். கார் வேகம் 30 கி.மீ. தாண்டக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அதிக குழுக்கள் பங்கேற்றன. பல குழுக்கள் குடும்பமாகவும் பங்கேற்றன. காலை 8 மணிக்குத் தொடங்கிய பேரணி, மதியம் நிறைவடைந்தது. பேரணியில் முதல் 3 இடங்களைப் பிடித்த கார்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT