தமிழகம்

மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: முதல்வருக்கு முத்தரசன் நன்றி

செய்திப்பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பேசிய முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, தமிழக அரசு “தகைசால் தமிழர்” விருதுக்கு மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை முதல் விருதாளராக தேர்வு செய்து, விருது வழங்கி கவுரவப்படுத்தியது. அதைத்தொடர்ந்து மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கும் தகைசால் விருது வழங்கி பெருமைப்படுத்தியது .

இவ்வாறு நாட்டுக்கும், மக்களின் நலனுக்கும் பாடுபட்ட மூத்த தலைவர்களை தொடர்ந்து பெருமைப்படுத்தி வரும் தமிழக அரசுக்கும், அவர்களதுநல்லியல்புகளை இளைய தலைமுறை அறிந்துகொள்ள ஊக்கப்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

SCROLL FOR NEXT