சென்னை: பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஃபிக்கி பெண்கள் அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
பெண்கள் தொழில்துறையில் முன்னேற்றம் அடையும் நோக்கில் ஃபிக்கி (FICCI) பெண்கள் அமைப்பு 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெண்களின் திறன் மேம்பாடு, பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல், மாற்றுத்திறனாளி பெண்கள் வேலைவாய்ப்பு போன்ற முன்முயற்சிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இதில் 550 உறுப்பினர்கள் உள்ளனர். இதன் 30-வது ஆண்டு விழாவையொட்டி ‘ஃபிக்கி பெண்கள் அமைப்பின் பெருமை (Pride of FLO)' என்ற நூல் வெளியீட்டு விழாசென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் எம்பி கனிமொழி பங்கேற்று நூலை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
பெண்களின் தியாகங்கள் நாட்டில் மதிக்கப்படுவதில்லை. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது. ஆனால் அவற்றை அவர்கள் போராடியே பெற வேண்டியுள்ளது. அவர்களால் அவர்களின் சொத்துகளை அணுக முடியவில்லை. இதனால்தான் அரசியலிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் இந்த அமைப்பு பெண்கள் முன்னேறுவதற்கான களத்தை 30 ஆண்டுகளாக அமைத்து கொடுத்து, அவர்களை முன்னேற்றி, சிறந்த சேவையாற்றி வருகிறது.
பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்திய அளவில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை பின்தங்கியே உள்ளது. தேசிய அளவில் பெண்கள் பெறும் சராசரி பிஎச்டி பட்டங்களின் எண்ணிக்கையைவிட, தமிழகத்தில் பிஎச்டி பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஃபிக்கி தமிழ்நாடு தலைவர் ஜி.எஸ்.கே.வேலு, ஃபிக்கி பெண்கள் அமைப்பின் தேசிய தலைவர் சுதா ஷிவ்குமார், சென்னை பிரிவு தலைவர் ராஜி ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.