வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே புறவழிச்சாலையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மாநகராட்சி தொழிலாளர்கள். 
தமிழகம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் சுத்தமானது வேலூர், திருப்பத்தூர் சாலைகள்

செய்திப்பிரிவு

வேலூர்/திருப்பத்தூர்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் வேலூர், திருப்பத்தூர் சாலைகள் ஒரே நாளில் சுத்தமானது.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங் களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இதையொட்டி, நேற்று இரவு வேலூர் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதைத்தொடர்ந்து, இன்று (திங்கள்கிழமை) காலை காட்பாடியில் உள்ள விளையாட்டு மைதானத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

இதையடுத்து, வேலூரில் இருந்து கார் மூலமாக திருப் பத்தூர் மாவட்டம் செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங் கேற்கிறார். இரவு ஏலகிரி மலையில் தங்கும் அவர் அடுத்த நாள் (18-ம் தேதி) திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், அமைச்சர் வருகையை முன்னிட்டு வேலூர் நகர் முழுவதும் நேற்று துப்புரவு பணிகள் அவசர, அவசரமாக நடந்தன. குறிப்பாக அமைச்சர் வந்து செல்லும் காட்பாடி சாலை முதல் வேலூர் விருந்தினர் மாளிகை வரை உள்ள சாலைகள்,

வேலூர் புறவழி சாலைகளில் மணல், குப்பை அனைத்தையும் அகற்றும் பணியில் மாநகராட்சி தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர். வேலூரில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் சேதமடைந்து கேட்பாரற்று கிடந்தன.

அமைச்சர் வருகையால் தற் போது அந்த சாலைகளுக்கும் விடிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம் பாடி, ஜோலார்பேட்டை முதல் திருப்பத்தூர் எல்லை வரையிலும், பொன்னேரி கூட்டுச்சாலையில் இருந்து ஏலகிரி மலை வரை அனைத்துசாலைகளும் தூய்மைப்படுத்தப்பட்டு சுத்தமாக காட்சியளிக்கின்றன. மேலும், அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மற்றும் திருப்பத்தூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

SCROLL FOR NEXT