தமிழகம்

“வருங்காலத்தில் தமிழகத்தை வழிநடத்தப் போகிறவர் உதயநிதி தான்” - அன்பில் மகேஸ் பேச்சு

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: இந் நூலக கட்டுமானப் பணியின்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு 13 முறை நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இவ்விழா சிறப்பாக அமையவும், மிகப்பெரிய வரவேற்பை அளித்ததிலும் அமைச்சர் பி.மூர்த்தியின் செயல்பாடு பாராட்டுக் குரியது.

வருங்காலத்தில் தமிழகத்தை வழிநடத்தப் போகிறவர் உதயநிதி தான். நான் அமைச்சராக காரணமாக இருப்பவர் அவர். அண்ணா நூலகத்தை கருணாநிதி உருவாக்கினார். கலைஞர் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை 5 முறை சந்தித்துள்ளேன். நீங்கள் தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து மதுரை, சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய இடங்களில் அதிக அலுவலகங்களை திறந்து இருக்கிறோம்.

இதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றார். நூலகம் திறப்பு விழா என்பதால் விழா மேடை நூலகம் போன்று பிரம்மாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற் றனர். முதல்வர் பேசுவதை மாணவர்கள் காணும் வகையில் 10-க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் வைக்கப்பட்டிருந்தன.

விழா மேடைக்கு முதல்வர் வருவதற்கு முன்பு மாணவர் களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் பேசினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின், ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ்நாடார், அந்நிறுவனத் தலைவர் ரோஷினி ஆகியோருக்கு கலைஞர் நூலக வடிவில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நூலகக் கட்டுமானப் பணியை தொடர்ந்து கண்காணித்து, சிறப்பாக அமைய காரணமாக இருந்த அமைச்சர் எ.வ.வேலுவுக்கு முதல்வர் மோதிரத்தை பரிசளித்தார். கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தலைமை கொத்தனார் அன்புச் செல்வம், உதவியாளர் ராக்கு உள்ளிட்டோருக்கு முதல்வர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட், இனிப்பு, காரம், தண்ணீர் பாட்டில், வழிகாட்டி கையேடு அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. மகளிர் குழுவினருக்கு இனி்ப்பு, காரம், தண்ணீர் பாட்டில் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏ-க்கள், மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு முதல்வர் பேசிய விழா மேடை முன்பு இருக்கைகள் அமைக்கப் பட்டிருந்தன.

இவர்களுக்கு முந்திரி பருப்பு, பிஸ்கட், மில்க் ஸ்வீட், ஜூஸ், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டன. விழா மேடையில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாக ராஜன், சு.வெங்கடேசன் எம்.பி, கோ.தளபதி எம்.எல்.ஏ., தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, அரசு செயலர்கள் முருகானந்தம், சந்திர மோகன், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

விழா மேடைக்கு அருகில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, திமுக மாவட்டச் செயலாளர் மணிமாறன், தமிழறிஞர் சாலமன் பாப்பையா, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, பூமிநாதன் எம்.எல்.ஏ., குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் வாசுகி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒத்தக்கடை ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி, காதக்கிணறு ஊராட்சித் தலைவர் செல்வி, விருதுநகர் தெற்கு மாவட்டப் பொருளாளர் கேவிகேஆர்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT