திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் நாள்தோறும் சேகரமாகும் 178 டன் திடக்கழிவுகளை ராமையன்பட்டியில் 118 ஏக்கர் நிலத்தில் கொட்டி வருகின்றனர். தினசரி சேரும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை பச்சை நிற கூடையிலும், மக்காத குப்பைகளை நீல நிற கூடையிலும் சேகரிக்க தூய்மை பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக தனித்தனியாக கூடைகளும், பேட்டரி வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
திட்டக்கழிவு மேலாண் மைக்கென்றே மாநகராட்சி பலகோடி ரூபாயை செலவிட்டு வருகிறது. பல்வேறு திட்டங்களும் அமலில் இருக்கின்றன. ஆனால் திறந்த வெளிகளிலும், நீராதாரங்களிலும், சாலையோரங்களிலும் கழிவுகளை கொட்டுவதை தடுக்க முடியவில்லை. தாமிரபரணி கரையோர பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளன.
இச்சூழ்நிலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளில் இருக்கும் கழிவுகளை குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை மாடுகள் உண்ணும் காட்சிகளை தற்போது பார்க்க முடிகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க முடியாததும், மக்களிடையே மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு இல்லாததும் கழிவு மேலாண்மையில் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரிக்கவும், மக்கும் குப்பைகளை நுண் உரமாக்கும் மையங்களுக்கு கொண்டு சென்று உரமாக்கி பயன்படுத்துவது, மக்காத குப்பைகளை ராமையன்பட்டிக்கு கொண்டு சென்று மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட நடைமுறைகளை சரிவர பின்பற்றுவதில் பிரச்சினைகள் இருக்கின்றன. பல இடங்களில் குப்பைகளை தரம்பிரித்து அளிப்பதில்லை. எல்லா குப்பைகளையும் ஒருசேரகொட்டி வைத்துவிடுவதால் மேலாண்மையில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி தனது ‘தூய்மை' மொபைல் ஆப் மற்றும் வெப் அப்ளிகேஷன் மூலம் நகர்ப்புற குடிமை அமைப்பில் சிறந்த திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஏற்படுத்தியதற்கான விருதை சமீபத்தில் பெற்றுள்ளது. கடந்த மே 28-ம் தேதி டெல்லியில் இந்த விருதை தற்போதைய மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி பெற்றிருந்தார். விருதுபெற்ற பெருமையுள்ள திருநெல்வேலியில் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அவலம் நீடிக் கலாமா?