புத்தகங்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழகம்

கல்வி வளர்ச்சி நாள் | அரசு பொது நூலகங்களுக்கு 7,740 புத்தகங்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: கல்வி வளர்ச்சி நாளையொட்டி நங்கநல்லூர், அரசு பொது நூலகங்களுக்கு 7,740 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான ஜுலை 15-யை ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று கருணாநிதியால் 2006ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இக்கல்வியாண்டில் கல்வி வளர்ச்சி நாளையொட்டி சென்னை மாவட்டம், நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெருந்தலைவர் காமராசரின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, சென்ற கல்வியாண்டில் (2022-23) சிறப்பாக செயல்பட்ட நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் 12ம் வகுப்பைச் சேர்ந்த 6 மாணவ, மாணவியர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும், 10ம் வகுப்பைச் சேர்ந்த 6 மாணவ, மாணவியர்களுக்கு 44 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும் முதல்வர் வழங்கி வாழ்த்தினார்.

மேலும், நேரு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் 777 மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கிலம்-தமிழ் அகராதிகளை வழங்கிடும் அடையாளமாக 4 மாணவ, மாணவியர்களுக்கு அகராதிகளையும், பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களையும் முதல்வர், வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, தன்னைச் சந்திக்க வருபவர்கள் அன்புப் பரிசாக வழங்கிய 7,740 புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறையின் பொது நூலகப் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக அப்புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் முதல்வர் வழங்கினார்.

SCROLL FOR NEXT