சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களின் புதிய கால அட்டவணையில், 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் கடும்அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களுக்குப் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரப்படுகின்றன.
இந்த மின்சார ரயில்களின் காலஅட்டவணை ஆண்டுதோறும் மாற்றிஅமைக்கப்படும். அதன்படி, இந்தஆண்டுக்கான மாற்றப்பட்ட காலஅட்டவணை நேற்றுமுதல் அமலுக்குவந்துள்ளது.
ஆண்டுதோறும் கால அட்டவணையை மாற்றும் போது, பயணிகளின் வசதிக்காக ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் 16 ரயில்களும், தாம்பரம் மற்றும் வேளச்சேரி வழித்தடத்தில் தலா 19 ரயில்சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது: பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு பொதுமக்கள் பெரும்பாலும் தற்போது ரயில்பயணத்தையே அதிகம் மேற்கொள்கின்றனர். இதனால், நாளுக்கு நாள் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொதுவாக, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ரயில் சேவைகளும் அதிகரிக்கப்படும். ஆனால், தற்போது ரயில் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னைசென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு இரவு 10.40 மணிக்கு கடைசி ரயில் சேவை இயக்கப்படுகிறது.
அதேசமயம், சென்னை கடற்கரையிலிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணத்துக்கு கடைசி ரயில் சேவை இயக்கப்பட்டது. சென்ட்ரலில் அரக்கோணத்துக்கு கடைசி ரயிலை தவறவிடும் பயணிகள் கடற்கரை ரயில் நிலையத்துக்குச் சென்று இந்த ரயிலில் ஏறிச் செல்வார்கள்.
மேலும், சென்னை துறைமுகம், அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளில் 2-வது ஷிப்ட்பணி முடிந்து செல்லும் தொழிலாளர்களுக்கு இந்த ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வந்தது.
இந்நிலையில், புதிய கால அட்டவணையில் கடற்கரையிலிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணத்துக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நள்ளிரவில் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் ரயில் நிலைய நடைமேடையிலேயே காத்திருந்து அதிகாலையில் இயக்கப்படும் முதல் ரயில்சேவையைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, ரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்ட ரயில் சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ``பராமரிப்பு பணிக்காக ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட்ட நெரிசல் இல்லாத மற்றும் இரவு நேரத்தில் மட்டும்தான் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் குறைவான ரயில்களே இயக்கப்படுவதால் அங்குரயில் சேவை குறைக்கப்படவில்லை'' என்றனர்.