சென்னை: தீபாவளிக்கு முந்தைய நாளுக்கான ரயில்முன்பதிவு நேற்று தொங்கியது. முன்பதிவுதொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து முக்கிய ரயில்களிலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கைகள் நிரம்பின.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவ. 12-ம் தேதி வருகிறது. தீபாவளிபண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல இப்போதே ரயில்களில் முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர்.
இதன்படி, தீபாவளிக்கு ஊருக்குச் செல்வதற்கான ரயில் முன்பதிவு கடந்த 12-ம் தேதிமுதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு முன்உள்ள 3 நாட்களுக்கு நேற்று முன்தினம் வரை முன்பதிவு செய்தனர்.
சென்னை எழும்பூரிலிருந்து செல்லும் கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, ராமேசுவரம், திருச்சி, மதுரை மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட முக்கியஊர்களுக்குச் செல்லும் ரயில்களில் உள்ள2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பிவிட்டது.
இந்நிலையில், தீபாவளிக்கு முந்தையநாள் நவம்பர் 11-ம் தேதி பயணம் செய்யநேற்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.அதிகாலை 4 மணிக்கே எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், பெரம்பூர்,ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட முக்கியரயில் நிலையங்களில்உள்ள முன்பதிவு மையங்களில் பொதுமக்கள் வந்து வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
அவர்களுக்கு போலீஸார் டோக்கன் வழங்கினர். 8 மணிக்கு ஐஆர்சிடிசி இணையதளத்திலும், கவுன்ட்டர்களிலும் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு கவுன்ட்டர் திறந்தவுடன் வரிசையில் முதலில் நின்ற ஒரு சிலருக்கே உறுதியான டிக்கெட் கிடைத்தது.
அடுத்து வந்தவர்களுக்கு ஆர்ஏசியும், காத்திருப்போர் பட்டியலும் வரத் தொடங்கியது. எனினும், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் காத்திருப்போர் பட்டியல் நீடித்த போதிலும் டிக்கெட் வாங்கிச் சென்றனர்.
கடந்த 3 நாட்களைவிட நேற்று முன்பதிவு செய்யக் கூட்டம் அதிகமாக இருந்தது. 5 நிமிடத்தில் முக்கிய ரயில்களில் உள்ள2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பிவிட்டது. பகல் நேர ரயில்கள் மற்றும் ஏசி வகுப்புஇடங்கள் மட்டும் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.