செங்கல்பட்டு/விழுப்புரம்: செங்கையில் பாமக பிரமுகர் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்த போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு சான்று வழங்கினார்.
செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் என்பவரை கடந்த 1-ம் தேதி 7 பேர்கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதுதொடர்பாக செங்கை நகரபோலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து அஜெய் (எ) சிவ பிரசாத் என்பவரை கொலை நடந்த அன்றே போலீஸார் காலில் சுட்டு பிடித்தனர். அதைத் தொடர்ந்து கார்த்திக் என்பவரை கைது செய்தனர். மேலும், சூர்யா (21), மாரி, மகன் தினேஷ் விஜயகுமார் ஆகிய 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், தர்மலிங்கம், உதவி ஆய்வாளர்கள் சங்கர், பிரதாப் சந்திரன், ராஜா, திருநாவுக்கரசு மற்றும் போலீஸார் 30-க்கும்மேற்பட்டோர் தனித்தனி குழுக்களாக சென்று குற்றவாளிகளை கைது செய்தனர்.
குற்றவாளிகளை பிடித்த ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி. சாய் பிரனீத் பாராட்டி சான்றுகளை வழங்கினார்.
இக்கொலை வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியைச் சேர்ந்த அன்வர் உசேன் (22) என்பவர், விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2-ல் நடுவர் அகிலா முன்பு நேற்று சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.