கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து கிராம நிர்வாகஅலுவலர் மயங்கி விழுந்து உயிர்இழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜகண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(56). இவர், கும்மிடிப்பூண்டி வட்டத்துக்கு உட்பட்ட ஈகுவார்பாளையம்-2 கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல் நேற்று காலை ஜெயச்சந்திரன், தன் மோட்டார் சைக்கிளில், பணிக்காக வீட்டிலிருந்து, ஈகுவார்பாளையம்-2 கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜெயச்சந்திரன், கும்மிடிப்பூண்டி அருகேமாதர்பாக்கம் - ஈகுவார்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஈகுவார்பாளையம் அருகே அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால், ஜெயச்சந்திரன், மோட்டார் சைக்கிளில் இருந்து மயங்கி சாலையில் விழுந்துள்ளார்.
போலீஸார் விசாரணை: இதனை அறிந்த பொதுமக்கள், ஜெயச்சந்திரனை மீட்டு, ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ஜெயச்சந்திரன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. பொதுமக்கள்மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து, பாதிரிவேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.