தமிழகம்

தொடுகாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட 26 கனரக பெரிய தொழிற்சாலைகளிடம் சொத்து வரியை வசூலிக்க வேண்டும்

செய்திப்பிரிவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தொடுகாடு பஞ்சாயத்து தலைவர் பி.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 26-க்கும் மேற்பட்ட பெரிய கனரக தொழிற்சாலைகள் முன்னணி தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளன.

இப்பகுதியினருக்கு வேலை வாய்ப்பை இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன என்ற ஒரேகாரணத்துக்காக இந்த நிறுவனங்களுக்கான சாலைகள், குடிநீர் மற்றும் தெரு விளக்குகள் போன்றதேவையான கட்டமைப்பு வசதிகளை பஞ்சாயத்து சார்பில் செய்துகொடுத்து வருகிறோம். இதன்மூலமாக இந்த பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றன. ஆனால் இந்த நிறுவனங்கள் தொடுகாடு பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரிகளை முறையாக செலுத்துவதில்லை. இதனால் எங்களால் மற்ற பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியவில்லை.

எனவே எங்களது பஞ்சாயத்துக்கு செலுத்தப்பட வேண்டிய வரிகளை நிலுவையின்றி இந்த நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வரி வசூல் அதிகாரியை நியமிக்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த நிறுவனங்களிடமிருந்து வரிகளை வசூலிக்க தகுதியான அதிகாரியை நியமிக்க வேண்டும், என வாதிடப்பட்டது.

திருவள்ளூர் ஆட்சியர் சார்பில்ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் மயித்ரேயி சந்துரு, இந்த 26 நிறுவனங்களுக்கும் நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமெனநோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதி, “பஞ்சாயத்துக்களுக்கு வரி வசூல் மூலமாகத்தான் வருவாய் கிடைக்கிறது. அதைக்கொண்டுதான் பஞ்சாயத்து நிர்வாகம் தடையின்றி இயங்க முடியும். இந்த வழக்கில் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் தரப்பில் நிலுவை வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெரிய நிறுவனங்கள் வரியை உடனடியாக செலுத்தவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT