சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வசிக்கும் கழைக் கூத்தாடிகளுக்கு எந்தவித வசதியும் இல்லாததால், மிகவும் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
மானாமதுரை சுற்றுப் பகுதிகளில் 55 கழைக்கூத்தாடி குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கயிறு மீது நடப்பது, தெருக்கூத்து போன்றவை மூலம் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள், தங்குவதற்கு வீடு, சாதி சான்று உள்ளிட்டவை இல்லாமல் சிரமமடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, மானுடவியல் ஆய்வாளர்கள் மூலம் இந்த கழைக் கூத்தாடிகள் குஜராத் மாநிலம், தொம்ரா இன மக்கள் என்பதை கண்டறிந்தார். தொடர்ந்து, அவர்களுக்கு சாதி சான்று வழங்கினார். மேலும், சன்னதி புதுக்குளம் பகுதியில் 55 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினார். அதையடுத்து, பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் வீடுகள் கட்டித் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நடவடிக்கை இல்லாததால், பட்டா வழங்கிய இடத்தில் தற்போது 11 குடும்பத்தினர் மட்டுமே தற்காலிகமாக வீடுகளை அமைத்துள்ளனர். இதில், வீட்டை மறைத்து தடுப்பாக சுற்றி துணிமணிகள், சாக்கு பைகளை கட்டியுள்ளனர். இதனால் மழைக் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் குழந்தைகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், செல்வி ஆகியோர் கூறியதாவது: மழைக் காலங்களில் வீடுகளின் மேற்கூரைகள் ஒழுகுகின்றன. 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்த குழந்தையை அடக்கம் செய்ய மயானம் இல்லாமல் சிரமப்பட்டோம். பின்னர், அருகேயுள்ள கிராம மக்களிடம் பேசி அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்தோம். கழிப்பறைகள் இல்லாததால் கண்மாய் பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்துகிறோம். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றனர்.