தமிழகம்

ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் அதிகமுள்ள ஆர்டிஓ அலுவலகம் சனிக்கிழமையும் செயல்படும்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் அதிகமுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ) சனிக்கிழமைகளிலும் செயல்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கை: ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை வேலைக்குச் செல்வோர் மற்றும் அரசுப் பணியாளர்கள் பெறும் வகையில் சென்னையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஓட்டுநர் உரிமம் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதிகளவு ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களை சனிக்கிழமையும் செயல்பட அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அரசுப் பணியாளர்கள், அலுவலகம் செல்வோர் மட்டுமின்றி அனைத்து பொதுமக்களும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் பயன்பெறலாம்.

இதற்கு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, சனிக்கிழமை செயல்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் குறித்த விவரத்தை, மாவட்ட ஆட்சியர் வாயிலாக செய்திக்குறிப்பை வெளியிட வேண்டும். அந்த செய்திக்குறிப்பை போக்குவரத்து ஆணையரின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கு அனுப்ப வேண்டும். ஆட்சியரின் செய்திக்குறிப்பின்றி எந்த ஒரு அலுவலகமும் செயல்படக் கூடாது.

இவ்வாறு அலுவலகங்கள் சனிக்கிழமை செயல்படும்போது, அதை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் தவறாகப் பயன்படுத்தாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் புகார் எழுந்தால், உத்தரவு திரும்பப் பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இடைத்தரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்தும் வகையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று உள்ளிட்ட சேவைகளைப் பெற வேண்டுமானால், நேரில் வந்தே ஆவணங்களைப்
பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரர்களை அறிவுறுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் செல்போன் எண்ணை குறிப்பிட்டு, கையெழுத்திட்ட பிறகு ஆவணங்களை வழங்க வேண்டும். ஆவணம் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரரின் விவரத்தை அறிக்கையாக ஆணையருக்கு அனுப்ப வேண்டும். அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு ஆவணம் கிடைத்ததா என ஆணையர் உறுதி செய்யவுள்ளார். விண்ணப்பதாரர் வர இயலாத சூழலில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT