திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அதிகாரிகள் பற்றாக்குறையால் மாவட்ட நிர்வாகம் அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் திணறி வருகிறது.
மேலும், ரூ.125 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இன்னும் செயல்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தனியாக பிரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக சிவன் அருள் பொறுப்பேற்றார். அதன் பிறகு, 2-வது ஆட்சியராக அமர் குஷ்வாஹா பொறுப்புக்கு வந்தார். புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நகரின் மையப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்ட இடம்தேர்வு செய்யப்பட்டு அதற்காக ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 7 அடுக்குகளை கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த புதிய ஆட்சியர் அலுவலகம் கடந்தாண்டு முதல் செயல்பட தொடங்கியது. புதிய ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைக்கான அரசு அலுவலகம் கொண்டு வரும் வகையில் 4 பிரிவுகளாக ஆட்சியர் அலுவலக கட்டிடம் பிரிக்கப்பட்டுள்ளது. 7 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் 6 மாடிகளில் பல்வேறுஅரசு அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் கொண்டு வர தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு, பல்வேறு அரசு அலுவலகங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் 3-வது ஆட்சியராக தற்போது பாஸ்கர பாண்டியன் பணியாற்றி வருகிறார். மாவட்ட நிர்வாகம் சிறப்புடன் செயல் படவும், அரசின் திட்டங்கள் கடைக் கோடி மக்களை சென்றடையவும் மாவட்ட ஆட்சியருடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் இணைந்து பணியாற்றினால்தான் அரசு இயந்திரம் சிறப்பாக செயல்படும்.
ஆனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய பதவிகளுக்கான உயர் அதிகாரிகள் இதுவரை நியமிக்கப்படாததால் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயலாற்றுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய பணியிடங்கள் தற்போது வரை காலியாகவே உள்ளன.
குறிப்பாக, துணை ஆட்சியர் பணியிடங்கள், நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட வழங்கல் அலுவலர், சமூக நல அலுவலர், கலால் பிரிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர் (பிஆர்ஓ) போன்ற பணியிடங்கள் அனைத்தும் நீண்ட காலமாக காலியாக உள்ளன.
மேலும், சில பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமலேயே உள்ளன. முக்கிய அலுவலர்கள் வேலூரில் இருந்து தான் செயல்பட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் கோரி அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் கீழ் மட்ட அரசு அலுவலர்கள் திணறி வருகின்றனர். அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லவும், மக்களின் குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல் நீடித்து வருகிறது.
அதிகாரிகளின் பற்றாக்குறையால் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் ஆங்காங்கே தேக்க நிலையிலேயே உள்ளன. துறையின் உயர் அதிகாரிகள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் அவர்களை நேரடியாக அணுகி அதிகாரிகளிடம் தங்களது குறைகளை தெரிவிக்க முடியும். ஆனால், திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான உயர் பணியிடத்துக்கான அதிகாரிகள் இல்லாமல் காலியாகவே உள்ளதால் பொது மக்கள் தங்களது குறைகளை யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
காலியாக உள்ள அதிகாரிகளின் பணியிடங்களுக்கு வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு நியமிப்பதால் அந்த பகுதியிலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், பொறுப்பு அதிகாரிகள் தினசரி திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்லவும் முடியவில்லை.
நீண்ட தொலைவில் இருந்து தினசரி வந்து செல்வதால் பல்வேறு காரணங்களை காட்டி அதிகாரிகள் விடுப்பு, மருத்துவ விடுப்பு, விருப்ப இடமாற்றம் வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. இதனால், அத்துறையில் வேலை செய்யும் சக அதிகாரிகளுக்கு பணி பளு அதிகரிகரிப்பதால் காலை முதல் இரவு வரை வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலவுவதாக அரசு அலுவலர்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், கடும் மன உளைச் சல், மன அழுத்தத்துக்கு ஆளாகும் அரசு அலுவலர்கள் பல்வேறு தேவைகளுக்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் பேசி அவர்களது குறைகளை கேட்க முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர் எனக் கூறலாம். எனவே, மாவட்ட வளர்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மட்டும் சுழன்று, சுழன்று பணியாற்றினால் போதாது. அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே திருப்பத்தூர் மாவட்டம் சிறப்பான மாவட்டமாக தரம் உயரும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.
இது குறித்து உயர் அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘ காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காலி பணியிடம் குறித்த பட்டியல் தயாரித்து அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், அனைத்து அரசு அதிகாரிகளும் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.