தமிழகம்

வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.634 கோடியில் குடியிருப்புகள், கட்டிடங்கள் - முதல்வர் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.634.30 கோடியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில், கோயம்புத்தூர், விருதுநகர், நீலகிரி, தேனியில் அரசு அலுவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர சென்னை, அமைந்தகரை, மயிலாப்பூர், திருவான்மியூர், கோயம்புத்தூர்- கணபதியில் வணிக வளாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னை மாத்தூரில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, சென்னை- திருவான்மியூரில் உயர் வருவாய் பிரிவினருக்கும், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரியில் இதர பிரிவினருக்குமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ. 276.15 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகக் கட்டிடங்கள், வாரிய பிரிவு அலுவலகக் கட்டிடம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுதிறந்து வைத்தார். மேலும், புதுக்கோட்டை, முள்ளூர் கிராமத்தில் ரூ.56.31 கோடியில் 100 ஏக்கர் பரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1603 மனை மேம்பாட்டுத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.358.15 கோடியில் 3,010 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், 902 பயனாளிகளில் 5 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

இக்குடியிருப்புகள், சென்னையில் சந்தோஷ் நகர், மூலக்கொத்தளம், செங்கல்பட்டு அன்னை அஞ்சுகம் நகர், காயரம்பேடு, பெரும்பாக்கம், வேலூர் பத்தலபல்லி, தருமபுரி மாவட்டம், மோலையானூர், தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, ரூ.1583.41 கோடி மதிப்பில் 15,505 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள் ளன.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் உயர்கல்வி பயிலும்100 மாணவர்களுக்கு டிபிஎஸ் வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.25 லட்சம் வழங்கும் அடையாளமாக 5 மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகைக்கான காசோலை களை முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எ. சரவணவேல்ராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT